சேலத்தில் தாயின் விபரீத முடிவு... அரசின் மீது நம்பிக்கை இழப்பா? - போட்டுத்தாக்கும் முன்னாள் அமைச்சர்!

Salem News: சேலத்தில் ஒரு தாய் தன் மகனின் கல்வி கடனை செலுத்துவதற்காக பேருந்து முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 03:34 PM IST
  • அவருடைய உயிரிழப்பு முதலில் விபத்து என கூறப்பட்டது.
  • சிசிடிவி ஆய்வு செய்த பின் அது தற்கொலை என முடிவு.
  • இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
சேலத்தில் தாயின் விபரீத முடிவு... அரசின் மீது நம்பிக்கை இழப்பா? - போட்டுத்தாக்கும் முன்னாள் அமைச்சர்! title=

Salem News: சேலம் முள்ளுவாடிகேட் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவரைப் பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தாய் இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரி படித்துவரும் மகளும், மகனும் உள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதி காலை 2-வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார்.

இதுகுறித்து டவுன் காவல் ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. 

உறுதிப்படுத்திய சிசிடிவி

அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், 2ஆவதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. விபத்து என்று முதலில் வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த விபத்திற்கு நான் காரணம் இல்லை என்று ஓட்டுநர் தெரிவித்திருந்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது பாப்பாத்தி தானாகவே பேருந்தின் முன்பு விழுந்து தற்கொலை செய்தது காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், பாப்பாத்தியின் மகள் மற்றும் மகன் இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். கல்லூரி படிப்பிற்கான கட்டணத்தை  இருவருக்கும் கட்ட முடியாத நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வறுமையில் வாழ்ந்து வந்துள்ளதால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். அப்பொழுது விபத்தில் இருந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியுள்ளனர். இதனால் பேருந்தில் விழுந்து உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும், அதில் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்று எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன?

இந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணை தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் திமுக அரசின் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் பேசியதாவது,"விபத்தில் இறந்தால் கல்லூரியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என ஒரு தாய், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம், நம்முடைய தமிழ்நாட்டுக்கே ஒரு தலைப்பு செய்தியாக இருக்கிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றுகின்றார். அவர் தன்னுடைய மகனின் படிப்புக்காக உதவி கிடைக்கவில்லை, தன் பெற்ற பிள்ளையின் கல்விக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டுள்ளார். இன்றைக்கு மாணவனின் தாய் உயிரை மாய்த்த வேதனை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தீர்வு காணுமா என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

'வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை'

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159-இல் தமிழக கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கி கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஒரு ஆண்டுக்குள் வங்கி கடனை செலுத்தாவிட்டால், 30 வயது உட்பட்ட இளைஞர்கள் வாங்கிய கல்விக் கடனை அரசே ஏற்று திருப்பிச் செலுத்தும் என்று கூறியுள்ளனர். ஆனாலும் வங்கிகளில் மாணவர்களுக்கு எந்த கடனும் பெற முடியவில்லை. 

தேர்தல் வாக்குறுதி எண் 160யில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கூட்டத்திலேயே, நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என கூறினார்கள். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. 520 தேர்தல் வாக்குறுதி போல இதுவும் ஏமாற்று வேலையாக உள்ளது. 

மேலும் படிக்க | "சொத்து சேர்க்க வேண்டும் என்பதே திமுக அமைச்சர்களின் எண்ணம்!"

'அரசின் மீது நம்பிக்கை இல்லை'

வேதனை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டிலே அதுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைப்பீர்கள், இது தொடர்கதையாக நடைபெறுகிறது. இதற்கு எப்போது ஒரு தீர்வு காண போகிறது இந்த அரசு என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

பெற்ற பிள்ளை படிக்க வைக்க முடியவில்லை என தன் உயிரை பணையம் வைத்தாவது தன் மகனின் கல்வி கட்டணத்தை செலுத்தலாமா என்று தமிழ்நாட்டில் ஒரு அவல நிலை இருக்கிறது என்று சொன்னால் நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மக்களை பற்றி சிந்திக்க வேண்டாமா? மக்களின் நம்பிக்கையை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது? இந்த தமிழ்நாட்டு மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து தன் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்.

'தமிழக வரலாற்றில் கரும்புள்ளி'

இந்த கல்வி கட்டணத்தை அரசு கேட்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தால், ஒரு தாய் தன் மகனின் கல்விக்காக தன் உயிரை மாய்த்து கொள்வாரா? இது எவ்வளவு பெரிய சோகமாகவும் ,நெஞ்சை உலுக்குகிற சம்பவமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளியாக இருப்பது வேதனையின் வேதனையாக உள்ளது. 

இன்றைக்கு தன் தாயை இழந்த பிள்ளையை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. இந்த அரசு விளம்பர அரசாக உள்ளது. அமைச்சர்கள் விசாரணையில் அரசுக்கு கவனம் செலுத்த நேரம் போதவில்லை, விழா நடத்த அரசுக்கு நேரம் போதவில்லை. மாணவர்களுக்கு மடிக்கணினி தரவில்லை, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 10 லட்சம் மாணவர்களுக்கு 2ஜி இலவச டேட்டா வழங்கினார், அதைக் கூட அரசு வழங்கவில்லை. மாணவர்களின் கல்வி கடனையும் ரத்து செய்யவில்லை.

இந்த தாய் நாட்டு மக்களுக்கு இன்றைக்கு எந்த உத்தரவாதம் இல்லை. ஒரு தாய் தன் உயிரை இழந்து இருக்கிறார். இதை அவ்வளவு சாதாரணமாக கடந்து போக முடியாது. ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தால் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்" என கூறினார்.

மேலும் படிக்க | இபிஎஸ் மீதான புகார்... திமுக மனு அதிரடி தள்ளுபடி - நீதிபதி தீர்ப்பில் சொன்னது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News