அதிமுக பொதுக்குழு வழக்கு: கிளைமேக்ஸ் இன்னும் முடியல.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுகவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் மேல்முறையீடு வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2023, 06:38 PM IST
அதிமுக பொதுக்குழு வழக்கு: கிளைமேக்ஸ் இன்னும் முடியல.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு title=

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த மார்ச் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு அனைத்து தரப்பினரின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. 

ஒபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் குரு கிருஷ்ண குமார் ஆகியோர் இரண்டு நாட்கள் வாதங்களை முன்வைத்தனர். மூன்றாவது நாளான இன்று ஒபிஎஸ் தரப்பான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதங்களை தொடங்கினார். அப்போது, சசிகலாவை பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு, 2017-ல் நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவே நிரந்தர பொது செயலாளர் என அறிவிக்கப்பட்டது என்றும், மீண்டும் பதவி உருவாக்கப்படாது என முடிவெடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி - அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்

மேலும், பொது செலாளர் பதவிக்கு மாற்றாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன என வாதிட்டார். இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு தான் ஒரு பதவியில் நியமிக்கப்பட்டதாகவும், பதவிகளை உருவாக்கி 2017-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் கட்சி தலைமையில் எந்த வெற்றிடமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

ஒரு பதவி காலியாவதாக கருதினால் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் கூடி புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடைமுறை உள்ளது. தங்களை நீக்குவதற்கு  முன்பாக கலந்தாலோக்கவில்லை. அதனால் ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நான்கு பேரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என வைத்தியலிங்கம் தரப்பில் வாதிடப்பட்டது. 

பொதுக்குழு கூட்டப்பட்டபோது ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடித்தார் என்பதால், அவர் ஒப்புதல் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு சட்டவிரோதமானது எனவும் வாதிட்டார். கட்சி உறுப்பினரையோ, நிர்வாகியையோ நீக்க ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளை மீறி விளக்கமளிக்க எந்த அவகாசமும் வழங்காமல்  நீக்கியுள்ளனர் என குற்றம்சாட்டினார். கட்சி விதிகளை பின்பற்றி நீக்கவில்லை எனத் தெரிவித்த தனி நீதிபதி, அந்த தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, மனோஜ் பாண்டியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறவில்லை. மாறாக இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக இருப்பதாகவே சுட்டிக்காட்டியுள்ளன என விளக்கம் அளித்தார். ஜெ.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, தீர்மானங்களுக்கு தடை விதிக்க தனி நீதிபதி மறுத்து விட்டார் என சுட்டிக்காட்டியதுடன், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு, பொதுக்குழுவை கூட்டியது செல்லுமா? செல்லாதா? என்பது தான் என விளக்கம் அளித்தார். 

ஆனால் இந்த வழக்கு கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்தது என்றும், இதற்கும் கட்சி செயல்பாட்டுக்கும் தொடர்பில்லை என தெரிவித்தார். ஓபிஎஸ் அணி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்  சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, பொது செயலாளர் நடவடிக்கைகள் பொது குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என விதி உள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதி தான் பின்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தார். 

அந்த அடிப்படை கட்டமைப்பு தற்போது முழுவதும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களே உச்ச நீதிமன்றத்திலும் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும், நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடி 50 மணி நேரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, வாதங்கள் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பில்லாததால், வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பதாக தெரிவித்தனர்.

அப்போது ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி, வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்படுவதால் உறுப்பினர் சேர்க்கை நீக்கம் ஆகியவற்றில் தங்கள் தரப்புக்கு எதிராக முடிவெடுக்கவோ அல்லது பாதிப்போ ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதிமுக தரப்பில் ஆஜரான வைத்தியநாதன், முந்தைய உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான எந்தவித முரணான உதாரணமும் இல்லாத நிலையில், இதுபோன்ற கோரிக்கைக்கு அவசியம் இல்லை என்றும், இது அவர்களின் அனுமானம் அல்லது அச்சத்தின் அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கை என சுட்டிக்காட்டினார். அப்போது நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கு தொடர்ந்த பிறகு எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் வழக்கின் இறுதி தீர்ப்பு உட்பட்டது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காடி வழக்கின் விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - செந்தில்பாலாஜி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News